tamilnadu

img

சத்தம் உள்ளது; சத்து இல்லை!

தொழிலாளர் விரோத பட்ஜெட் போராட்டங்களை உக்கிரப்படுத்துவோம்: சிஐடியு

பாஜக அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2020-21 பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என்றும், மக்களைப் பல்வேறு விதங்களிலும் ஏமாற்றும் பட்ஜெட் என்றும் சிஐடியு கண்டித்துள்ளது.
பட்ஜெட் குறித்து சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

  •     பாஜக அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சத்தம் உள்ள அளவிற்கு, சாராம்சம் எதுவும் கிடையாது. பொருளாதார மந்த நிலைமை தொடர்ந்து கொண்டி ருக்கும் இச்சமயத்தில் அதன் காரணமாக அதிகரித்திருக்கும் வறுமை, மக்களின் வறிய நிலை விரிவடைவது, வேலையின்மை மிகவும் அபாயகரமான முறையில்  அதிகரிப்பது ஆகியவை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
  •  பட்ஜெட்டில் 271 மில்லியன் (27 கோடியே 10 லட்சம்) மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழேயிருந்து மேலே கொண்டுவந்துவிட்டோம் என்று மக்களை முழுமையாக ஏமாற்றும்  நோக்கத்துடன் கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் கிராமப்புறங்களில் நுகர்வோர் செலவினம் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று தேசிய மாதிரி சர்வே அலுவலக (என்எஸ்எஸ்ஓ)  அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு பொய்யாக புனையப்பட்டிருக்கிறது.
  •      “பெண்குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்” என்கிற திட்டம் குறித்தும், மற்றும் இதுபோன்ற பெண்கள் நலன்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மிகப்பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதார்த்தத்தில், பெண்கள் வேலை செய்திடும் விகிதாசாரம் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்துகொண்டே  வந்திருக்கிறது. அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும் அதிகரித்திருக்கின்றன. பல இடங்களில் இவை ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்திருக்கின்றன.  பல இடங்களில் ஆண்கள் பெறும் ஊதியங்களைவிட அதே வேலைக்குப் பெண்களுக்கு 31 சதவீதத்தைவிட குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படும் நிலை தொடர்கிறது. இறுதியில் “பெண்குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்” திட்டத்திற்கும் பட்ஜெட் ஒதுக்கீடு 20  கோடி ரூபாய்க்கும் மேல் குறைக்கப்பட்டிருக்கிறது. 
  •      பட்ஜெட் உரையில், நாடு தழுவிய அளவில் கட்டமைப்பிற்கான முதலீடு குறித்தும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு அரசு முழுமையாகத் தனியாரைச் சார்ந்திருப்பதால், இன்றைக்குள்ள பொருளாதார மந்த நிலையில், இது அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது. எடுத்துக்காட்டாக, 1,37,000 ஏக்கர் நிலத்தை, எண்ணெய்/எரிவாயு எடுப்பதற்காகத் தனியாரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இவர்களால் இதுவரை எங்கேயும் எண்ணெய்யோ/எரிவாயுவோ வெளிக்கொணரப்படவில்லை.
  •      பொது விநியோக முறையில் உணவு மான்யம் அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 76 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. உலகப் பட்டினி அட்டவணையில் இந்தியா மிகவும் வேகமாக சரிந்துள்ள நிலையில் அரசு இவ்வாறு செய்திருக்கிறது. அதேபோன்று மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், ஆயுஷ்மான் பாரத், பிஎம்ஜெய், பிஎம்கிசான் திட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன. உழைக்கும்  மக்களின் நிலைமைகளை உயர்த்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்தோ, சமூக நலத்திட்டங் களைக் கொண்டுவருவது குறித்தோ, சம வேலைக்கு சம ஊதியம் அளிப்பது குறித்தோ, அங்கன்வாடி, சத்துணவு, ‘ஆஷா’ ஊழியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை.
  •      தனிநபர் வருமான வரிக்கான விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பது தொழிலாளர் களுக்கு பயன் அளித்திடும் எனினும், இது தொடர்பாக வரித்தள்ளுபடிக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த சலுகைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. மறுபக்கத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகள் தாராள மாக்கப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் வரியைக் குறைத்திருப்பதன் மூலமாக வும், மற்றும் பல்வேறு வடிவங்களிலும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டி ருக்கின்றன. இவ்வாறு சலுகைகளை வாரி வழங்குகையில் அவர்கள்தான் நாட்டில்  “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்று பிரதமர் மோடி கூறுவதுபோல் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர்கள், நாட்டின் வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசுக்குச் செலுத்தாமல் வைத்திருக்கும் நேரடி வரி என்பது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 7.63 லட்சம் கோடி ரூபாயாகும்.  
  •      எல்ஐசி உட்பட பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரை வார்க்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் நாசப்படுத்திடும்.
  •      ஜனவரி 8 அன்று தான் நாட்டிலுள்ள 25 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். எனினும், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஒதுக்கித்தள்ளியிருக்கிறது. இக்கோரிக்கைகள் எதையும் பரிசீலித்திட இந்த அரசு முன்வரவில்லை.

எனவே வரவிருக்கும் காலங்களில் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுத்திட, தங்கள் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை மேலும் உக்கிரப்படுத்திட வேண்டும் என்று  அனைத்துத் தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.  

                                      (ந.நி.)

;